ஷா ஆலம், நவ 28 — கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்த, மயங்கும் வரை மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து மாணவர்கள் நீக்கப்பட்டனர்.
மேலும், மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் சுங்கை பட்டாணியில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தை கடுமையாக எடுத்துக்கொள்வதாக கெடா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதில் பள்ளி முழுமையான உள்துறை விசாரணையை முடித்துவிட்டது. சமபந்தப்பட்ட மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, இடைநீக்கம் மற்றும் முழுமையான நீக்கம் செய்யும் தண்டனை அமல்படுத்தப்பட்டது.
“பகடிவதை, வன்முறை மற்றும் ஒழுங்கீன செயல்களில் எந்தவித சமரசமும் இருக்காது,” என்று கெடா மாநில கல்வித்துறை தனது அறிக்கையில் வலியுறுத்தியது.
மாநிலத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்போதுள்ள ஒழுக்க மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றி, மாணவர்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், கல்வி சமூகத்தின் நலனை பேணுவதற்காக தடுப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டும் எனவும் அத்துறை பரிந்துரைத்தது. இது தொடர்பான ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பள்ளிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தது.
இதற்கு முன், ஒரு மாணவர் அடிக்கப்பட்டு மயக்கம் அடைந்து விடுதியின் கழிப்பறையில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தைக் குறித்து நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை உறுதிப்படுத்தியது.
நால்வரில் ஒருவருக்கு தடுப்பு காவல் விதிக்கப்பட்டதாகவும் , மூவர் விடுவிக்கப்பட்டதாகவும் கோலா மூடா மாவட்டக் காவல்துறை தலைவர் துணை கமிஷனர் ஹன்யான் ரம்லான் கூறினார்.


