கோலாலம்பூர், நவ 28- கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் (PH-கிள்ளான்), பொதுப் பல்கலைக்கழகங்களில் உள்ள விடுதி வசதிகளின் கொள்ளளவை விரிவாக்கம் செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
வளாகத்தில் உள்ள தங்குமிடங்கள் நிரம்பி வழியும் காரணத்தால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வெளியே வாடகைக்கு தங்க வேண்டியிருப்பதைத் தவிர்க்க இந்த விரிவாக்கம் அவசியம் என்று அவர் கூறினார்.
இத்தகைய நிலைமை மாணவர்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிப்பதாகவும், வெளி வளாகத் தங்குமிடங்களுக்காக மாதந்தோறும் RM300 முதல் RM800 வரை வாடகை செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களது குடும்பங்களுக்குச் சுமையாகவும் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
"உயர் கல்வி அமைச்சகத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் உள்ள RM3.9 பில்லியன் மேம்பாட்டு நிதியில் ஒரு பகுதியை விடுதி கொள்ளளவை அதிகரிக்கப் பயன்படுத்த வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம், நீண்ட காலப் போக்கில் எந்தவொரு பொதுப் பல்கலைக்கழக மாணவரும் வளாகத்திற்கு வெளியே தங்க வேண்டியதில்லை" என்று அவர் நாடாளுமன்றத்தில் பேசினார்.
மாணவர்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது அவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு சமமானது என்றும் கணபதிராவ் தெரிவித்தார்.


