கிள்ளான், நவ 28- கிள்ளான் பள்ளத்தாக்கில் சென்யார் புயல் மையம் கொண்டிருக்கும் நிலையில் கோத்தா ராஜா நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட செந்தோசா சட்டமன்ற தொகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மிக கவனமுடனும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
இதனை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அறிவுறுத்தினார். தேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா, சென்யார் என்ற வெப்பமண்டல புயல் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தற்போது மலாக்கா நீரிணையில் நகர்ந்து வரும் இந்தப் புயல், தீபகற்ப மலேசியாவின் மேற்கு மற்றும் மத்திய கடற்கரைப் பகுதிகளை பாதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தொடர்ச்சியான கனமழை, பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம்.
இதனால் பாதிக்கப்படக்கூடிய அபாயமுள்ள பகுதிகளில் கோலாலம்பூர், சிலாங்கூர், பஹாங் மற்றும் அருகிலுள்ள மேற்கு/மத்திய மாநிலங்கள் அடங்கும். அனைவரும் அதிக கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு குணராஜ் ஜோர்ஜ் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.


