புத்ராஜெயா, நவ 28 — வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது தொலைந்து போன மலேசிய சர்வதேசக் கடப்பிதழுக்கு இலவசமாக மாற்றுப் கடப்பிதழ் வழங்கப்படும் என்று குடிவரவு துறை அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்கவும், அவர்களின் பயணத் தேவைகள் மற்றும் அதிகாரப்பூர்வ செயல்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க உதவுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என அதன் தலைமை இயக்குனர் டத்தோ சகாரியா ஷாபான் கூறினார்.
“வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது தொலைந்து போன கடப்பிதழுக்கு பதிலாக மாற்றுப் கடப்பிதழுக்கு அருகிலுள்ள எந்த குடிவரவு அலுவலகத்திலும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
“இந்த முயற்சி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்கும் என நம்புகிறோம்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
மாற்றுப் கடப்பிதழ் பெற, தற்போது உள்ள கடப்பிதழ் இன்னும் செல்லுபடியாகும் நிலையில் இருக்க வேண்டும். அதில் குறைந்தது ஆறு மாதம் காலம் மீதமிருக்க வேண்டும் என்றும் சகாரியா கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் அடையாள அட்டை, முதன்மை கடப்பிதழ் (இன்னும் இருந்தால்), கடப்பிதழுக்கான காவல்துறையின் புகார் நகல், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அல்லது சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல் அல்லது உதவிக்காக, விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள குடிவரவு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். குடிவரவு துறை சிறந்த சேவையை வழங்குவதிலும், மக்களின் நலனை முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுவதிலும் தொடர்ந்து உறுதியாக இருக்கிறது என அவர் கூறினார்.



