ஷா ஆலம், 27 நவம்பர்: மாநில அளவில் நடைபெற உள்ள சுக்மா விளையாட்டு போட்டிக்கு தயாராக சிலாங்கூர் அரசு RM100 மில்லியன் அளவிலான நிதியை ஒதுக்கியிருப்பது விளையாட்டு துறையில் முக்கிய முதலீடாகப் பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது.
பெட்டாலிங்கில் வசிக்கும் பர்வீன் சேகர், இந்த ஒதுக்கீடு மாநில இளைஞர்களின் திறமை வளர்ச்சிக்கும், விளையாட்டு தரத்தை உயர்த்துவதற்கும் பெரும் ஆதரவாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். “சுக்மா என்பது நாட்டின் இளைஞர் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய மேடை. இப்படியான போட்டிக்கு மாநிலம் முன்கூட்டியே தயாராகிக் கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது என்றார். RM100 மில்லியன் ஒதுக்கீடு கட்டமைப்பு மட்டுமல்ல; அது எங்கள் இளைஞர்களின் எதிர்காலத்தில் செய்யப்படும் முதலீடாகும்,” என்றார் பர்வீன்.
இந்த நிதி மூலம் விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், வீரர்களுக்கான பயிற்சி, தொழில்முறை வழிகாட்டுதல், உடற்தகுதி ஆதரவு போன்ற அம்சங்களும் வலுவாகும் என்று அவர் கூறினார். பயிற்சி மையங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் நவீன தரத்தில் இருக்க வேண்டும். இதற்கு அரசு முக்கியத்துவம் அளிப்பது, வீரர்களின் மன உறுதியை உயர்த்துகிறது. இது மாநிலம் முழுவதும் விளையாட்டில் ஈடுபட விரும்பும் இளய தலைமுறைக்கு ஊக்கமாக இருக்கும்,” என அவர் தெரிவித்தார்.
சுக்மாவுக்கு முன் ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டால், மாநிலம் பல பதக்கங்களை வெல்லும் திறன் அதிகரிக்கும் என்றும் நம்புகிறார். “முன்னேற்பாடுகள் நன்கு நடந்தால் மட்டுமே வீரர்கள் தங்களின் முழுத்திறனை வெளிப்படுத்த முடியும். இந்த நிதி ஒதுக்கீடு அந்தத் திசையில் ஒரு சிறந்த நடவடிக்கை,” என்றார்.
மக்கள் பலரும், இந்த முதலீடு நீண்டகாலத்தில் விளையாட்டு பண்பாட்டை மேம்படுத்தி, மாநிலத்தை தேசிய மட்டத்தில் முன்னணியில் நிறுத்தும் என நம்புகின்றனர்.


