ஷா ஆலம், 27 நவம்பர்: மலேசிய கல்வி அமைச்சு அடுத்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் 350 முன்பள்ளி வகுப்புகளை விரிவுபடுத்தும் இலக்கை நிர்ணயித்துள்ளது. இதில் கிராமப்புறங்கள் மற்றும் உட்புற பகுதிகளும் முக்கியமாக சேர்க்கப்பட்டுள்ளன.
2030ஆம் ஆண்டுக்குள் முன்பள்ளி கல்வியை கட்டாயக் கல்வியாக மாற்றுவதற்கான முன்னேற்பாடாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது கல்வி அமைச்சின் கல்வி மாற்று திட்டத்தின் ஒரு பகுதியாகவும் செயல்படுகிறது என்று கல்வி துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் மொத்தம் 10,197 முன்பள்ளி வகுப்புகள் உள்ளன. இதில் 6,368 வகுப்புகள் கல்வி அமைச்சின் கீழ் செயல் படுகின்றன. இவற்றில் 3,222 வகுப்புகள் நகர்ப்புறங்களிலும், மீதம் 3,146 வகுப்புகள் கிராமப்புறங்கள் மற்றும் தூரப் பகுதிகளில் அமைந்துள்ளன.
முன்பள்ளி விரிவாக்கம் தொடக்கப் பள்ளிகளுக்குள் மட்டுமின்றி, மேல்நிலைப்பள்ளிகள், தொழிற்கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களிலும் மேற்கொள்ளப்படும். இத்தகைய இடங்களில் முன்பள்ளி வகுப்புகளுக்குத் தேவையான வசதிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டில், மொத்தம் 150 புதிய வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இது ஏற்கனவே உள்ள இடங்களைப் புதுப்பித்தல், மாற்றுதல் மற்றும் ஆரம்பக் கல்வி உபகரணங்களால் பூர்த்தி செய்வதன் மூலம் செய்யப்படும். அதற்கு அடுத்து, மேலும் பெரிய அளவிலான விரிவாக்கம் எதிர்வரும் ஆண்டுகளில் நடைபெறும்.
கல்வி அமைச்சு தேசிய முன்பள்ளி தரநிலைகள் (SKPK) என்ற கண்காணிப்பு முறையைப் பயன்படுத்தி வருகிறது. இது கற்பித்தல்-கற்றல் செயல்முறை, பள்ளி மேலாண்மை மற்றும் உடற்தள வசதிகள் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சமமான தரத்தில் உள்ளனவா என்பதை உறுதி செய்கிறது. இத்தகைய கண்காணிப்பு முறைகள் ஒழுங்கு வழிப்பட்ட, அளவிடக்கூடிய மற்றும் தொடர்ந்து செயல் படக் கூடியதாக இருப்பதன் மூலம் முன்பள்ளி கல்வியின் கற்பித்தல் தரத்தையும் கற்றல் சூழலையும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்,” என்று அவர் தெரிவித்தார்.


