சிராஸ், நவ 27- உழைத்து தன் குடும்பத்தை காக்க வேண்டிய சூழ்நிலையில் 19 வயதான இளம் பெண் முக்கிய தொண்டை அறுவை சிகிச்சையை கைவிட வேண்டிய நிலையில் இருப்பதை அறிந்து பலக்கோங் சட்டமன்ற வெயின் ஓங் சின் வே உதவினார் .துர்காவின் நெகிழ்ச்சி தரும் வாழ்க்கைக் கதை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தந்தை, கண்பார்வை குறைபாடுள்ள பாட்டி மற்றும் பள்ளி செல்லும் மூன்று தம்பிகள் என குடும்பத்தின் சவாலான சூழ்நிலையில், அவர்களை காப்பாற்றும் பொறுப்பு ஏற்றுக் கொண்டு நோய் பற்றி கவலைப் படாமல் உறுதியுடன் பணியாற்றி வருகிறார்.
இருப்பினும், அவருக்கு தைராய்டு நோய் இருப்பது கண்டறியப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சிகிச்சைக்குத் தேவையான அத்தியாவசிய உபகரணமான எண்டோட்ரேக்கியல் குழாயை (Endotracheal Tube) வாங்குவதற்கு நிதி உதவி வழங்கி அந்த குடும்பத்தை காப்பாற்றி விட்டார் பலக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெயின் ஓங் சின் வே.
இந்நிலையில், துர்கா மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்த பலக்கோங் சட்டமன்ற சமூக சேவை குழுவினர், நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு, அறுவை சிகிச்சை சரியான நேரத்தில் நடப்பதை உறுதி செய்யும் வகையில், தேவையான உபகரணத்தின் முழுச் செலவையும் சட்டமன்றத்தின் மூலம் ஏற்று உதவ முன் வந்துள்ளனர்.
துர்காவின் மனவுறுதி பாராட்டிற்குரியது என்றும், அவர் இச்சவாலை தனியாக எதிர்கொள்ளவில்லை என்றும், குழுவினர் தொடர்ந்து அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


