சுங்கை பெட்டானி, நவ 27: பள்ளி விடுதியில் 16 வயது மாணவர் ஒருவர் மயங்கும் வரை தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையதாக, நான்காம் படிவ மாணவர் ஒருவர் மூன்று நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அம்மாணவன் விடுதி கழிப்பறையில் மயக்க நிலையில் ஆசிரியர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டு, சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில் உடலில் பல இடங்களில் அடிபட்ட சுவடுகள் உள்ளன என்று தெரியவந்தது.
மாணவனின் தாய்க்கு இந்த சம்பவம் காலை 9.05 மணியளவில் தெரிவிக்கப்பட்டது, அப்போது அவரது மகனின் நிலை மருத்துவமனையில் சீராக இருந்தது.
தகவலின்படி, இச்சம்பவம் இரவு 12.10 மணியளவில் நடந்ததாகவும், பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டதால் இது நடந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆரம்ப விசாரணையில் மாணவன் ஒருவர் தனது நண்பரை இழிவுபடுத்தியதால் கோபமடைந்து, மேலும் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனைத் தாக்கியுள்ளனர் என கோலா மூடா மாவட்டக் காவல்துறை தலைவர் உதவி கமிஷனர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
“16 முதல் 17 வயது வரை உள்ள நான்கு மாணவர்கள் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் நான்காம் படிப்பு மாணவன் ஒருவருக்கு மட்டுமே மூன்று நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது. மற்ற மூவர் சுங்கை பெட்டானி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்,” என்று அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் அந்த விடுதியில் முதல்முறையாக நடக்கிறது. மேலும் சம்பவ இடத்தில் சிசிடிவி வசதியும் இல்லை என தெரிய வந்தது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டப் பிரிவு 507 கீழ் விசாரணை செய்யப்படுகிறது.


