ஷா ஆலம், நவ 27: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் RM1,000 மதிப்புள்ள ``Bantuan Wang Ihsan`` (BWI) உதவியை பெறுவதற்காக, MyIBJKM செயலி மூலம் சமூக நலன் துறை (JKM) உடன் பதிவு செய்ய வேண்டும் என பேரிடர் மேலாண்மை தேசிய முகமை (நட்மா) அறிவுறுத்தியுள்ளது.
தற்காலிக நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்வது, இத்திட்டத்தின் முதன்மை நிபந்தனையாகும் என நட்மா தலைமை இயக்குநர் மீர் இஸ்மாயில் மீர் அக்கிம் கூறினார்.
“மேலும், தற்காலிக நிவாரண மையங்களில் இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும். எனினும், அவர்கள் சரிபார்ப்பிற்காக MyIBJKM மூலம் பதிவு செய்ய வேண்டியது அவசியம்,” என்று அவர் தெரிவித்தார்.
பதிவு செயல்முறையை எளிதாக்குவதற்காக தற்காலிக நிவாரண மையங்களில் JKM அதிகாரிகள் QR குறியீடுகளை வழங்கி வருகின்றனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தகவல் துல்லியமாகவும் விரைவாகவும் பதிவு செய்யப்படும்.
வங்கி தகவலை செயலில் புதுப்பித்துள்ளவர்களுக்கு BWI தொகை மின்னணு நிதி பரிமாற்றத்தின் மூலம் வழங்கப்படும். வங்கி கணக்கு இல்லாதவர்கள் Bank Simpanan Nasional (BSN) கிளைகளில் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
“தகுதி பெற்றவர்களுக்கு SMS மூலம் BSN கட்டண முறையை அறிவிக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
“நிலைமை விரைவில் சீராகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.



