ஷா ஆலம், நவ 27: கம்போங் அலா பத்து, கம்போங் சங்காட் பிந்தாங் மற்றும் ஸ்ரீ கிளேடாங் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பத்தாங் காலி மாநிலச் சட்டமன்ற குழு உதவி வழங்கியது.
நீர்மட்டம் திடீரென உயர்வதால் அந்த பகுதிகளில் முக்கிய வழித்தடங்கள் நீரில் மூழ்கி, மக்கள் உணவுப் பொருட்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது என ஒருங்கிணைப்பாளர் சைஃபுடின் ஷாஃபி முகமது கூறினார்.
“அவசர நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகள் கொண்ட உணவு கூடைகளை வழங்கி வருகின்றோம், இது சாலை மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலைக்கு வரும் வரை அவர்களின் சுமையை குறைக்க உதவும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.
ஸ்ரீ கிளேடாங் தேசியப் பள்ளியில் அமைந்துள்ள தற்காலிக நிவாரண மையம் (PPS) தேவை ஏற்பட்டால் திறக்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் அந்த குழு ஆய்வு மேற்கொண்டது.
இந்த உடனடி நடவடிக்கை, பேரிடர் காலத்தில் மக்களின் அடிப்படை தேவைகள் தங்கு தடையின்றி கிடைக்க மாநில சட்டமன்றத்தின் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, உதவி தேவையுள்ள அனைவரும் தக்க நேரத்தில் உதவியைப் பெறுவதை உறுதி செய்யும் என்றும் அக்குழு கூறியுள்ளது.


