ஈப்போ, நவ 27- 2026ஆம் ஆண்டுக்கான பேராக் மாநில பட்ஜெட்டில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மாநில அரசாங்கம் வெ.12 மில்லியனை ஒதுக்கியிருப்பதாக மாநில இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.
அந்த 12 மில்லியனில் தமிழ்ப்பள்ளிகளுக்காக வெ.1 மில்லியன் ஒதுகப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
2025ஆம் ஆண்டு பட்ஜெட்டை போலவே 2026ஆம் ஆண்டுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.1 மில்லியன் ஒதுகப்பட்டிருக்கும் நிலையில் இம்மாநில தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியும் மேம்பாடும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக கண்காணிக்கப்படுவதோடு அதன் தேவைகளும் நன்நிலையில் நிறைவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளையில், பேரா மாநில இந்து ஆலயங்களுக்காக வெ.6 மில்லியன் ஒதுகப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர் மத்திய அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் வெ.5 மில்லியனோடு பேரா மாநில இந்து ஆலயங்களுக்கு வெ.11 மில்லியன் அடுத்தாண்டு ஆலயங்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி அதன் செயல்பாடுகளுக்காகவும் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், இந்திய கிராமத்து தலைவர்களுக்கான அலாவன்ஸ் வெ.100 உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு 2 மாத போனஸ் வழங்கவும் பட்ஜெட் வழிசெய்திருப்பதாகவும் சுட்டிக்காண்பித்தார்.
அதுமட்டுமின்றி, மாநில பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட 4 மில்லியன் நிதியிலும் ஒவ்வொரு பள்ளியிலும் கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியும் அதற்குரிய நிதியினை பெறுவர் என்றும் அந்நிதி பள்ளியின் மின்சாரம் உட்பட இதர செலவினத்திற்காக பயன்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் விவரித்தார்.


