லண்டன், நவ 27- ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண ஆட்டத்தில் இங்கிலாந்தின் லிவர்புல் அணி, PSV Eindhoven அணியிடம் 1-4 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
இந்தத் தோல்வியானது, அந்த ஐரோப்பிய எலைட் போட்டியில் குழு நிலை ஆட்டங்களில் சொந்த மைதானத்தில் தோல்வியடையாமல் இருந்த 'தி ரெட்ஸ்'இன் 14 போட்டிகள் கொண்ட சாதனையையும் முடிவுக்குக் கொண்டு வந்தது.
PSV அணிக்கு கௌஹைப் ட்ரியூச் (Couhaib Driouech) இரண்டு கோல்களைப் போட்டு அணியின் நாயகனாக விளங்கினார்.
அதைத் தொடர்ந்து, இவான் பெரிசிச் (Ivan Perisic) பெனால்டி மூலம் ஒரு கோலும், கூஸ் டில் (Guus Til) ஒரு கோலும் அடிக்க, நெதர்லாந்து அணி விலைமதிப்பற்ற மூன்று புள்ளிகளுடன் குழுவில் 14-வது இடத்திற்கு முன்னேறியது.
கடைசி 12 போட்டிகளில் ஒன்பதில் தோல்வியடைந்த லிவர்பூல், ஒன்பது புள்ளிகளுடன் 12-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆட்டம் தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே வர்ஜில் வான் டைக் (Virgil van Dijk) ஹேண்ட்பால் செய்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து PSV அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை பெரிசிச், கோல்கீப்பர் ஜியோர்ஜி மமர்தாஷ்விலியைத் தோற்கடித்து கோலாக மாற்றினார்.
லிவர்பூல் அணிக்கு 16-வது நிமிடத்தில் டொமினிக் ஸோபோஸ்லாய் (Dominik Szoboszlai), கோடி காக்போவின் (Cody Gakpo) முயற்சி மாட்டேஜ் கோவாரால் தடுக்கப்பட்டதை எளிதாக கோலாக மாற்றி நம்பிக்கையை அளித்தார்.
இந்தத் தோல்வியானது, பயிற்சியாளர் ஆர்ன் ஸ்லோட் வழிகாட்டுதலின் கீழ் இந்த சீசனில் லிவர்பூலின் தொடர்ந்து மோசமடைந்து வரும் ஆட்டம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


