ஷா ஆலம், 27 நவம்பர்: மலேசிய வானிலை துறை திரங்கானுவின் சில பகுதிகளுக்கு வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியான கனமழை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கை பெசுட், கோலா நூரூஸ் மற்றும் கோலா திரங்கானு மாவட்டங்களை உள்ளடக்கியது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த பகுதிகளில் மிக அதிக அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கிளந்தான் மற்றும் திரங்கானுவின் உலு திரங்கானு, மாராங், டுங்குன் மற்றும் கெமாமான் மாவட்டங்களிலும் நீடித்த கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இப்பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை வரை கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
வரும் வெள்ளி முதல் சனி வரை, கெடாவின் கூலிம் மற்றும் பண்டார் பாரு, பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜொகூர் ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குடிமக்கள் அனைவரும் திடீர் வெள்ளம், நிலச்சரிவு, பலத்த காற்று, மற்றும் போக்குவரத்து தடங்கல் போன்ற அபாயங்களை மனதில் கொண்டு விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்வான பகுதிகள் மற்றும் மலை சரிவு பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை தேவைப்படுகிறது.
புதிய வானிலை தகவல்களைப் பெற வானிலை துறையின் இணையதளம், myCuaca செயலி, சமூக ஊடகங்கள் அல்லது 1-300-22-1638 என்ற தொலைபேசி வழியாக தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


