ஷா ஆலம், நவ 27: செத்திய சிட்டி கன்வென்ஷன் சென்டர் (SCCC) வளாகத்தில் நாளைத் தொடங்கும் சிலாங்கூர் சர்வதேசப் புத்தக கண்காட்சி (SIBF) 2025இல் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 7 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சுமார் 400 கண்காட்சி இடங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர் என சிலாங்கூர் பொது நூலக கழகம் (PPAS) நிறுவனத்தின் கார்ப்பரேட் யூனிட் தலைவர் சப்ருல்லா அரிஸ் தெரிவித்தார்.
SIBF 2025 உள்ளூர் மற்றும் சர்வதேச பதிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் புத்தகத் துறையினருக்கு B2B (Business-to-Business) வணிக தளமாகவும் அமையும்.
“இதில் சீனா, இந்தியா, துருக்கி, சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு (UAE) ஆகியவை உட்பட 14 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டின் சிறப்பு அழைப்பு மாநிலங்கள் சீனாவின் குவாங்டாங் மற்றும் இந்தியாவின் தமிழகமாகும்,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
மேலும், நாள்தோறும் RM500 வழங்கும் அதிர்ஷ்ட குலுக்கை வெல்லும் வாய்ப்பு பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஒவ்வொரு நாளும் 10 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
RM30 மதிப்பு கொண்ட ஒவ்வொரு கொள்முதலுக்கும் அதிர்ஷ்ட குலுக்கில் கலந்து கொள்ள ஒரு பங்கேற்பு வாய்ப்பு வழங்கப்படும். வெற்றியாளர்களின் பெயர்கள் மாலை 6.30 மணியும் 8.30 மணியும் அறிவிக்கப்படும்.
PPAS ஆண்டுதோறும் நடத்தும் இக்கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதன் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். இதனால், புத்தக நேசிகள் மற்றும் அறிவை பெருக்க விரும்புவோருக்கான முக்கிய தலமாக இது திகழ்கிறது.


