ஷா ஆலாம், நவ 27- சிலாங்கூர் மாநில அரசாங்கம், பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு உகந்த சூழலை உருவாக்கவும் RM30 மில்லியன் ரிங்கிட் தொகையை ஒதுக்கியுள்ளது.
இது இதுவரை வழங்கப்பட்டதிலேயே அதிகபட்ச ஒதுக்கீடு ஆகும். மதப் பள்ளிகள், சீனத் தேசிய வகைப் பள்ளிகள், தமிழ்த் தேசிய வகைப் பள்ளிகள் (SJKT), தேசியப் பள்ளிகள், தேசிய இடைநிலைப் பள்ளிகள், சீனத் தனியார் இடைநிலைப் பள்ளிகள் மற்றும் மிஷனரிப் பள்ளிகள் உட்பட பல வகைப் பள்ளிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளன.
இந்த ஊக்கத்தொகை, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கல்வியில் சிறந்து விளங்கும் உத்வேகத்தை அதிகரிக்கும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுவரை 873 பள்ளிகள் இந்த உதவியைப் பெற்றுள்ளன. இத்திட்டம் வெறும் கட்டட வசதிகளை அமைப்பது மட்டுமல்லாமல், உகந்த மற்றும் போட்டி நிறைந்த கற்றல் சூழலை உருவாக்கவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
B40 இந்திய சமூகத்திற்கு நிவாரணம்:
குறைந்த வருமானம் கொண்ட B40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், கட்டமைப்பு மேம்பாட்டுக்காக RM2.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது 2025-ஐ விட RM515,000 அதிகரித்துள்ளது. இந்த நிதியில், தமிழ்ப் பள்ளிகளைச் (SJKT) சேர்ந்த B40 மாணவர்களுக்கான பேருந்துகட்டணத்துக்காக RM1.2 மில்லியன் ரிங்கிட்டும், குடும்ப B40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் உயர் கல்வி கட்டண உதவித் திட்டத்திற்காக RM1.5 மில்லியன் ரிங்கிட்டும் அடங்கும்.
2009-இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், உள்ளூர் சமூகத்தின் கல்வி மற்றும் நலனை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது


