ஷா ஆலாம், நவ 27- வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு உதவும் நோக்குடன், சிலாங்கூர் மாநில அரசாங்கம் மாமா கெர்ஜா முன்னெடுப்பின் கீழ் RM5 மில்லியன் ரிங்கிட் தொகையை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், ஆறு வயதுக்குட்பட்ட 2,166 குழந்தைகள், அவர்களின் தாய்மார்களுக்கு உதவியாக, மூன்று ஆண்டுகளுக்கு மாதந்தோறும் RM100 ரிங்கிட் ரொக்கச் சலுகையைப் பெறுவார்கள்.
இந்த முன்னெடுப்பு, மாநிலத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் பெண்களின் பங்கை மதிப்பதையும், அவர்கள் தொடர்ந்து மாநிலத்திற்கும் குடும்பத்திற்கும் சேவையாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இந்தச் சலுகையின் செயல்திறனை உறுதிப்படுத்த, குழந்தைகளுக்கு வழங்கப்படும் ரொக்கப் பணம், அவர்களின் வளர்ச்சிக் கண்காணிப்புடன் இணைக்கப்படும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, மொத்தம் 4,417 உழைக்கும் தாய்மார்கள் மாமா கெர்ஜா சலுகையாக RM1,000 ரிங்கிட் பெற்றனர். இது குழந்தைப் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்க உதவியது.
TUNAS திட்டம் மூலம் 3,700 குழந்தைகளுக்குப் பலன்:
அதுமட்டுமின்றி, எதிர்வரும் ஆண்டுகளில் TUNAS (Skim Bantuan Tadika Selangor) திட்டம் மூலம் 3,700 குழந்தைகள் பலன் பெறவுள்ளனர். இதற்காக RM2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. வீடுகளின் மாத வருமானம் RM5,000-க்குக் குறைவாக உள்ள ஐந்து மற்றும் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு, மாதம் RM50 ரிங்கிட் வீதம் சலுகை கிடைக்கும்.
“TUNAS திட்டம், சிலாங்கூரில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான ஆரம்பக் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே உள்ளது” என்று அமிருடின் ஷாரி விளக்கினார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட மாமா கெர்ஜா முன்னெடுப்பு, 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளைக் கொண்ட மற்றும் மாத வீட்டிலக்கு வருமானம் RM8,000-ஐத் தாண்டாத உழைக்கும் தாய்மார்களுக்கு உதவுகிறது.
எதிர்வரும் ஆண்டுகளுக்கான பரந்த இலக்குகளை விளக்கிய அவர், தரமான கல்வியில் முன்னோடியாக சிலாங்கூரின் நிலையை உறுதிப்படுத்த மாநில அரசு உறுதியுடன் செயல்படுகிறது என்று கூறினார்.


