ஷா ஆலம், நவ 27 - அடுத்தாண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டில் பெண்களின் மேம்பாட்டிற்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதில் மாமாகெர்ஜா மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்பு சந்தையும் அடங்கும்.
சிலாங்கூரில் பணிபுரியும் பெண்களுக்கு உதவுவதற்காக மாமாகெர்ஜா திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டம் தாய்மார்கள் மற்றும் தந்தையர்களிடமிருந்தும் தொழில்துறையினரிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை மேலும் விரிவுப்படுத்த மாநில அரசு விரும்பியது. அதன் அடிப்படையில் அடுத்தாண்டு ஆறு வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மாதத்திற்கு RM100 ரொக்க உதவியை வழங்குவதாக மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி அறிவித்தார்.

இதுபோன்ற திட்டங்கள் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அதில் பாலின சமநிலையும் இடம்பெற செய்கிறது என ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி ஷர்மினி நாயர் (30) மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்து கொண்டார்.
பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு சந்தை மூலம் பெண்கள் தங்களுக்கான தகுந்த வேலையை தேடி கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார். இது அவர்களின் தகுதியை உயர்த்தி கொள்ளவும் தங்களின் திறமையை வெளிகாட்டவும் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றார்.
மேலும், பணிபுரியும் தாய்மார்களுக்கு மாமாகெர்ஜா போன்ற திட்டங்கள் மிகவும் பக்கபலமாக இருப்பதாக ஷர்மினி கூறினார். இதன் மூலம் சிலாங்கூரின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கும் அதிகமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாகப் பெண்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட சிலாங்கூர் மாநில அரசுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.


