ஷா ஆலம், நவ 26: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால், சிலாங்கூர் மாநில மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு நினைவூட்டப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக உயர்ந்த அபாயப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் சுற்றுப்புற சூழ்நிலையை கவனித்து, தங்களது மற்றும் குடும்பத்தினரது பாதுகாப்பை முன்னிலைப்படுத்த வேண்டும் என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெள்ளநீரில் விளையாட விடாமல் இருக்கவும் அவர் அறிவுறுத்தினார்.
“வெள்ளநீர் சுத்தமாக இருக்காது, பல்வேறு பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகளை கொண்டிருக்கும் அபாயம் உள்ளது. இது பலவிதமான நோய்களை ஏற்படுத்தக்கூடும்,” என்று அவர் எச்சரித்தார்.
மக்கள் எப்போதும் தனிநபர் சுத்தத்தை பேணி காக்கா வேண்டும்; குறிப்பாக கைகளை அடிக்கடி கழுவி, உணவு எந்தவித மாசுபாடுமின்றி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
நோயின் அறிகுறிகள் தென்பட்டால், நிலைமை மோசமடையாமல் இருக்க உடனே சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளக் காலத்தில் நம் பாதுகாப்பிற்கும், குழந்தைகளின் மற்றும் குடும்பத்தினரின் நலனை காக்கவும் மிகவும் முக்கியமானவை,” என்று அவர் கூறினார்.



