ஜாசின், நவ 26: போலி முதலீட்டு திட்டத்தால் ஏமாற்றப்பட்ட பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் 9,14,758 ரிங்கிட் இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் 40 வயதுடைய திருமணமான பெண் ஆவார். சமூக வலைத்தளத்தில் இடம்பெற்ற பங்கு வர்த்தகத்தை கற்றுக் கொள்ளும் முதலீடு தொடர்பான விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு 28 ஜூலை அன்று அந்த விளம்பர இணைப்பை பாதிக்கப்பட்டவர் நாடியுள்ளார் என ஜாசின் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்பிரண்டெண்ட் லீ ராபெர்ட் கூறினார்.
“பின்னர், பாதிக்கப்பட்டவர் வாட்ஸ்ஆப் செயலி மூலம் சந்தேக நபரை தொடர்பு கொண்டுள்ளார்.
செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 18 வரை, பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரின் வழிகாட்டுதல்படி சேமிப்பு, வங்கி கடன் மற்றும் குடும்பத்தினரின் பணம் ஆகியவற்றை கொண்டு ஒன்பது வங்கி கணக்குகளுக்கு 20 பரிமாற்றங்கள் செய்துள்ளார்.
“இலாபத்தை பெறுவதற்கு முன்பு, ஒரு காலாண்டு கட்டணமாக கூடுதல் 20,000 ரிங்கிட் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவரிடம் கூறப்பட்டது. பின்னர் அவர் ஏமாறப்பட்டுள்ளார் என்பதை உணர்ந்து, கடந்த 23 நவம்பர் ஜாசின் காவல் நிலையத்தில் புகார் செய்தார்,” என்று லீ ராபெர்ட் கூறினார்.
தற்போது காவல்துறை சம்பந்தப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளையும் விசாரித்து வருகிறது.
பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், எந்த முதலீட்டு திட்டத்திலும் சேரும் முன் நுணுக்கமான பரிசோதனை செய்யுமாறும் லீ ராபெர்ட் கேட்டு கொண்டார்.


