ஷா ஆலம், 26 நவம்பர்: தனது முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் தொடர்பாக எழும் எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சுதந்திரம் வழங்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மேலும் ஷம்சுல் நேற்று மாலை ராஜினாமா செய்த சுமார் 17 மணி நேரத்திற்குப் பிறகு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உறுதி மொழியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமது அகினின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட, அவர் வழங்கிய சேவைக்குப் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் மடாணி அரசு வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையின் கொள்கைகளில் உறுதியாக இருப்பதாகவும், அனைத்து விசாரணைகளும் சட்டத்தின்படி நடைபெறுவதை அரசு உறுதி செய்வதாகவும் பிரதமர் கூறினார். அவர் மேலும், தன்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் முயற்சிகளும், மதாணி அரசின் மரியாதையை குலைக்க திட்டமிட்ட நடவடிக்கைகளும் நடைபெற்றுள்ளதாக கூறினார்.


