ஷா ஆலாம், நவ 26- சிலாங்கூர் மாநிலத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 2025 மீண்டும் வரவிருக்கிறது. இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் அனைவரும் உற்சாகமாகக் கலந்துகொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம்.
2025ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை இந்தச் சிறப்பு நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இதில், மதியம் 3.30 மணிக்கு விருந்துச் சாப்பாடு பரிமாறப்படும். இந்த கொண்டாட்டம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒன் உத்தாமா பேரங்காடியின் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில உள்ளூராட்சி, சுற்றுலா துறை ஆட்சிக்குழு உறுப்பினரும் நிகழ்வின் ஏற்பாட்டு குழு தலைவருமான மாண்புமிகு இங் சுய் லிம் தெரிவித்தார்.
இங்குப் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் செயல்பாடுகளும் உங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன. சிலாங்கூர் மாநிலத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு மறக்கமுடியாத அனுபவத்தைப் பெறுங்கள் என்று மாநில அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


