லண்டன், நவ 26- ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தொடரின் குழு நிலையிலான சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்தின் மென்செஸ்டர் சிட்டி அணி, ஜெர்மனியின் பயெர் லெவர்குசன் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
இவ்வாட்டம் இங்கிலாந்து, மென்செஸ்டர் சிட்டி எட்டிஹாட் அரங்கில் நடைபெற்றது. இதன் மூலம், சாம்பியன்ஸ் லீக் குழு மற்றும் லீக் கட்டத்தில் சிட்டியின் சொந்த மண்ணில் 23 ஆட்டங்கள் கொண்ட தொடர்ச்சியான தோல்வியற்ற பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மென்செஸ்டர் சிட்டி நிர்வாகியாக பெப் கார்டியோலா (Pep Guardiola) பங்கேற்ற 100வது சாம்பியன்ஸ் லீக் போட்டி இதுவாகும். பல முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்த அவரது துணிச்சலான வியூகம் பின்னடைவை ஏற்படுத்தியது.
ஆட்டத்தின் 23வது நிமிடத்தில், லெவர்குசனின் அலெஜான்ட்ரோ கிரிமால்டோ (Alejandro Grimaldo) ஒரு வேகமான எதிர்த்தாக்குதலின் மூலம் முதல் கோலை அடித்து சிட்டியைத் திக்குமுக்காடச் செய்தார்.
அதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 54வது நிமிடத்தில், பேட்ரிக் ஷிக் (Patrik Schick) தலையால் முட்டிய பந்து, தடுப்பாட்டக்காரர் நாதன் அக்கேயின் (Nathan Ake) பாய்ந்து தடுக்க முயன்ற முயற்சிக்கு மேலாகவும், கோல் காப்பாளர் ஜேம்ஸ் டிராஃபோர்டின் (James Trafford) கைகளுக்கு எட்டாமலும் சென்று இரண்டாவது கோலாக மாறியது.
இந்தத் தோல்விக்குப் பிறகு, மென்செஸ்டர் சிட்டி அணி ஐந்து ஆட்டங்களின் முடிவில் 10 புள்ளிகளுடன் தற்காலிகமாக ஆறாவது இடத்தில் உள்ளது.


