கோலாலம்பூர், நவ 25- வெள்ளப்பேரிடர் காரணமாக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்துள்ள பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இன்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அவர்களின் முகநூல் பதிவில், மாமன்னர் அவர்கள், தேசியப் பேரிடர் முகாமைத்துவ நிறுவனம் தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் நல்ல நிலையில், பாதுகாப்பாக இருப்பதையும், வெள்ள நிவாரண மையங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்டிருப்பதையும் உறுதி செய்யுமாறு கட்டளையிட்டார்.
அடிப்படை வசதிகள், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.
மேலும், "மக்கள் இடம்பெயர்வு உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், அபாயகரமான பகுதிகளில் தங்கி ஆபத்தை எடுக்க வேண்டாம் என்றும் நினைவுறுத்தப்படுகிறார்கள்," என்று மாமன்னர் இன்று அரச ஊடக அலுவலகம் மூலம் விடுத்த செய்தியில் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி செய்வதற்காக அயராது உழைக்கும் பாதுகாப்புப் படை வீரர்கள், மீட்பு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்குச் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.




