ஷா ஆலாம், நவ 5- சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ள 750 குடும்பங்களுக்கு உடனடியாக RM500 ஆரம்ப நிவாரண உதவி வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
மந்திரி பெசார் அவர்களின் அறக்கட்டளை (MBI), வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ள SPM மாணவர்களின் தேர்வு நடவடிக்கைகள் தொய்வின்றித் தொடர, எழுதுபொருட்கள் மற்றும் டிஜிட்டல் உபகரணங்களையும் வழங்கவுள்ளதுடன், பள்ளிக்குச் செல்ல போக்குவரத்து வசதிகளையும் மாநில நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு லங்காட், பெட்டாலிங் மற்றும் கிள்ளான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 2,784 பேர் 21 தற்காலிக இடப்பெயர்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நீர் மட்டம் உயர முக்கியக் காரணம், எதிர்பார்ப்பைக் காட்டிலும் மிக அதிக அளவில் மழை பெய்ததுதான் என்றும், இது மேலும் எட்டு மாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் சிறப்பு மாநில செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு மந்திரி புசார் தெரிவித்தார்.
மேலும், சில முக்கியப் பகுதிகளில் வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இது குறித்து மாநில உள்கட்டமைப்புச் செயற்குழு உறுப்பினர் டத்தோ ஐ ஆர் இஷாம் ஹாஷிம் இன்று மாலை விரிவாக அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
இந்தப் பேரிடர் சவாலான நேரத்தில், சிலாங்கூர் மக்களைப் பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும், மக்களுக்கு விரைவான உதவிகளை வழங்க அயராது உழைக்கும் மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மந்திரி புசார் தெரிவித்தார்.




