ஷா ஆலாம், நவ 25- சிலாங்கூரில் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான அனைத்து SPM தேர்வர்களும் இன்று முதல் நாள் தேர்வுக்கு ஆஜரானார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தேர்வில் பங்கேற்றனர் என்பதையும், அவர்களுக்கான ஆதரவு வழங்கப்படும் என்பதையும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதி செய்தார்.
மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நண்பர்கள் வீடுகளுக்கும் மாற்றப்பட்டுள்ளனர், மேலும் சில பள்ளிகள் தற்காலிக இடப்பெயர்வு மையங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் வசதிக்காக அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மந்திரி புசார் தெரிவித்தார்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 634 குடும்பங்களைச் சேர்ந்த 2,336 பேரைத் தங்கவைக்க 21 தற்காலிக இடப்பெயர்வு மையங்கள் மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த வெள்ளத்திற்கு அதிக மழைப்பொழிவே காரணம் என்றும், சபாக் பெர்ணமில் அணை உடைந்த சம்பவம் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டாமான்சாரா ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், வெள்ளத் தடுப்புக்கான விரைவுத் திட்டங்களின் தாக்கத்தை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறினார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று சிறப்பு உதவி அறிவிக்கப்படும் என்றும், களப் பணிகளை ஒருங்கிணைக்கச் சிறப்புப் பேரிடர் மேலாண்மை விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும் மந்திரி புசார் நேற்று தெரிவித்திருந்தார்.





