புத்ராஜெயா, நவம்பர் 24: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து உயர் கல்வி கூடங்களும் இணையவழி கற்பித்தல் மற்றும் கற்றல் (PdP) முறைகளுக்கு மாறலாம் என்று உயர் கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்று அமைச்சு கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாகத் தொடரும் கனமழையால் கிழக்கு கடற்கரை மற்றும் தீபகற்பத்தின் வடக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழ்நிலையை உயர் கல்வி அமைச்சு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
இந்த முறை ஏற்பட்ட வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளையும், நகரங்களையும் பாதித்தது மட்டுமல்லாமல், பல உயர் கல்வி நிறுவன வளாகங்களிலும் வெள்ளம் சூழ்ந்து, வளாகச் செயல்பாடுகளுக்கும், கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சு குறிப்பிட்டது.
"பாதிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள வெள்ளச் செயல்பாட்டு அறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் சமீபத்திய தகவல்களைப் பெறுவதற்கும், உணவு, தற்காலிகத் தங்குமிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் போன்ற அவசர உதவிகளை வழங்குவதற்கும் வசதியாக இருக்கும்," என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள உயர் கல்வி நிறுவன உறுப்பினர்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு மாறுமாறும் உயர் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.




