ஷா ஆலாம், நவம்பர் 24: சிலாங்கூரில் நேற்றிரவு பெய்து வரும் தொடர் மழையால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சூழ்நிலையைச் சிலாங்கூர் மாநில அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டுச் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் களமிறங்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைக்கச் செய்யத் தற்போதைய நிலவரத்தைத் தனது அரசாங்கம் புதுப்பித்து வருவதாக டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"இந்த வெள்ளச் சூழல் குறித்த அறிக்கையை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைத்து அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட தரப்பினரையும், ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்வோம்.
இந்தச் சம்பவத்தின் விளைவுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதையும் நாங்கள் பார்ப்போம். மழை தொடர்ந்து நாளை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.




