ஷா ஆலாம், நவ 24- நேற்று முதல் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து கிள்ளான் ஆற்றில் நீர்மட்டம் திடீரென அதிகரித்துள்ளதால், கிள்ளான் பள்ளத்தாக்கு (Lembah Klang) குடியிருப்பாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பெரும்பாலான மக்கள், கிள்ளான் ஆறு கரைபுரண்டு ஓடி, தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற கவலையையும், விழிப்புணர்வையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு பயனர், வெள்ள அபாய எச்சரிக்கை சைரன் ஒலிக்கப் பட்டதாகவும், நகர மையப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப் பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்னின் என்ற மற்றொரு சமூக ஊடகப் பயனர், பூச்சோங்கில் உள்ள கம்போங் செபெலா மற்றும் கம்போங் ஸ்ரீ அமான் பகுதிகளில் கிள்ளான் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சில சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
"என்னுடைய வீடு உயரமான இடத்தில் உள்ளது, ஆனால் நீர்மட்டம் உயரும் போது, நாங்கள் தீவு போல மாறி, எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழப்பட்டுவிடுவோம். நீர் ஓட்டம் தாமான் மாஸ் முதல் ஸ்ரீ மூடா வரை செல்கிறது. எல்லாப் பகுதிகளிலும் நீர்மட்டம் உயர ஆரம்பித்தால், நாங்கள் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும்" என்றும் அவர் கவலை தெரிவித்தார்.




