ஷா ஆலாம், நவம்பர் 24: ஷா ஆலாம் மாநகரத்தைச் சுற்றியுள்ள சில முக்கியச் சாலைகள் கனமழையால் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாகப் பயணிக்கச் பாதுகாப்பற்ற நிலையில், அவை முழுமையாக மூடப் பட்டுள்ளதாகச் ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (MBSA) தெரிவித்துள்ளது. சாலைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மலேசியக் காவல்துறை (PDRM) இந்தச் சாலைகளை மூடியுள்ளதாக MBSA இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.
முழுமையாக மூடப்பட்டுள்ள முக்கியச் சாலைகள்:
ஜாலான் செக்ஷன் 19
செக்ஷன் 24 (செக்ஷன் 23 நோக்கிச் செல்லும் சாலை)
பெர்சியாரான் ஜூப்லி பேராக் (Persiaran Jubli Perak)
பெர்சியாரான் பெருசாஹான் (Persiaran Perusahaan)
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்பிற்காக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, ஷா ஆலம் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை MBSA தெரிவித்திருந்தது. தாமான் தேசா கெமுனிங் (செக்ஷன் 35), கம்போங் புடிமான் (செக்ஷன் U14), கம்போங் குபு கஜா (செக்ஷன் U17), ஜயண்ட் செக்ஷன் 13, தாமான் ஸ்ரீ லெம்பாயுங் (செக்ஷன் 25), ஜாலான் ஓபெரா (செக்ஷன் U2), பெர்சியாரான் ஜூப்லி பேராக் (செக்ஷன் 19), பாடாங் ஜாவா-வில் உள்ள ஜாலான் மாட் ராஜி (செக்ஷன் 16), ஜாலான் மன்தாப் 25/126, ஜாலான் செந்தோசா 25/129, பெர்சியாரான் புடிமான் (செக்ஷன் 25) மற்றும் பெர்சியாரான் பெருசாஹான் (செக்ஷன் 23) ஆகியவை இவற்றில் அடங்கும்.
ஷா ஆலம் மட்டுமின்றி, கனமழையால் நீர்மட்டம் உயர்ந்ததால் காரணமாக கிள்ளான் பகுதியில் உள்ள கம்போங் டேலெக், காப்பார் மற்றும் மேரு உள்ளிட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.






