ஷா ஆலம், நவ 24- மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை விரைவாக அறிமுகப்படுத்துவதில் தனியார் துறையின் ஈடுபாட்டையும், ஒத்துழைப்பையும் சிலாங்கூர் மாநில அரசு ஊக்குவிப்பதாக மாண்புமிகு டத்தோ மந்திரி புசார், டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களிடையே தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) தேர்வுகளை பலப்படுத்துவதற்கான மாநில அரசின் முயற்சிகள் மற்றும் செயல் பாடுகளைத் தொழில்துறை ஈடுபாடு துரிதப்படுத்த முடியும் என்று டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
"அறிவியல், தொழில்நுட்பம், தானியங்கிமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றைப் பற்றிய புரிதலுக்கு மாறுவதை விரைவாக நகர்த்த, தனியார் துறை அல்லது தொழில்துறையின் ஈடுபாடு தேவை என்பதில் நான் உடன்படுகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, பொறியியல் மற்றும் கணிதம் தொடர்பான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்ப/தொழிற்கல்வி போன்ற துறைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்த நிறுவனங்கள் இளம் மாணவர்களுக்குத் தெளிவான பாதையை வழங்க முடியும் என்பதனால் இந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் கூறினார்.
சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அஹ்மத் யூனுஸ் ஹேரி எழுப்பிய அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறையை வலுப்படுத்துவது தொடர்பான கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கும் போது, சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் மந்திரி புசார் இவ்வாறு தெரிவித்தார்.
இதற்கிடையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களின் திறனை ஆராயும் வகையில், சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் (Selangor Technical Development Centre - STDC) அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளில் களமிறங்கும் என்றும் அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த புதிய முயற்சி, மாணவர்கள் வழக்கமாக SPM (மலேசிய கல்விச் சான்றிதழ்) தேர்வுக்குப் பிறகு விண்ணப்பிப்பது போலன்றி, அவர்களுக்கு தேவையான கூடுதல் ஆயத்தப் பயிற்சி மற்றும் வசதிகளை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். "இதற்கு முன்பு, மாணவர்கள் SPM தேர்ச்சி பெறும் வரை மட்டுமே நாங்கள் காத்திருந்தோம்.
இப்போது, நாங்கள் மேல்நிலைப் பள்ளிகள் அல்லது உயர்நிலைப் பள்ளிகளுக்குள் நுழைய விரும்புகிறோம், மேலும் வாய்ப்பு இருந்தால், நாங்கள் கீழ்நிலைப் பள்ளிகளுக்கும் நுழையலாம். அதன் மூலம்தான், இந்த இளம் மாணவர்கள் தயாராக இருக்கவும், அதிக ஆர்வத்துடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அல்லது உயர் செயல்திறன் கொண்ட தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வித் துறைகளில் ஈடுபடவும், ஆராயவும் தேவையான பாதையை நாங்கள் உருவாக்குகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
2020-இல் மறுபெயரிடப்பட்ட STDC, மாநில அரசின் கீழ் உள்ள ஒரு தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாகும். மேலும், சிலாங்கூர் மந்திரி புசார் (நிறுவனம்) அல்லது MBI நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது.





