பூச்சோங், நவ 23 — ஆயர் ஹிதாம் காட்டு ரிசர்வ் (புக்கிட் வாவசான்) அருகே உள்ள நிலப்பரப்பு, வனத்துறை அல்லது யுனிவர்சிட்டி புத்ரா மலேசியா (UPM) நிர்வாகத்தின் கீழ் உள்ள காட்டு ரிசர்வ் நிலத்தின் பகுதி இல்லை என்று கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் வலியுறுத்தினார்.

தாமான் வாவசான், பண்டார் புத்ரி, பண்டார் கின்ராரா, பண்டார் பூச்சோங் ஜெயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அந்த நில உரிமையாளரின் சமூக தாக்க மதிப்பீட்டு (SIA) செயல்பாடு குறித்து அவர் இவ்வாறு கூறினார்.
“குறிப்பிடப்பட்ட நிலப்பரப்பு காட்டு ரிசர்வில் சேர்க்கப்படவில்லை; வனத்துறையாலோ அல்லது சுல்தான் இட்ரிஸ் ஷா வனக்கல்வி மையம் (Sisfec) மூலம் யுபிஎம் நிர்வகிக்கும் 1,176 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காட்டு ரிசர்வின் பகுதியல்ல,” என்றார் அவர்.
தற்போது சுபாங் ஜெயா நகராட்சி மன்றத்திற்கு (MBSJ) எந்த வளர்ச்சி விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இங் ஸீ ஹான் கூறினார்.
“MBSJ இதுவரை அந்த நிலப்பரப்பில் எந்த வகையான வளர்ச்சிக்கும் எவரிடமிருந்தும் விண்ணப்பம் பெறவில்லை. நடைபெற்று வரும் SIA செயல்முறை என்பது நில உரிமையாளர் MBSJ க்கு முறையான விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கு முன் நிபந்தனையாகும்,” என்றார்.
கடந்த வாரம் ஆன்லைனில் நடத்தப்பட்ட கவனம் செலுத்தப்பட்ட குழு விவாதம் (FGD) அதிகாரப்பூர்வ மதிப்பீட்டு செயல்முறைக்கு ஏற்றதல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
“கடந்த வாரம் ஆன்லைனில் நடைபெற்ற FGD அமர்வை நான் கவனித்துள்ளேன்; அது SIA செயல்முறையின் பகுதியாக கருத முடியாது என்று MBSJ க்கு தெரிவித்துள்ளேன். உடனிருந்து நடத்தப்படும் FGD அமர்வு தேவை, அதன்மூலம் கேள்வி-பதில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும். புக்கிட் வாவசான் காட்டுப் பாதையை பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தும் ஹைக்கிங் குழுக்கள் உட்பட அனைத்து பாதிக்கப்படும் குடியிருப்பாளர்களும் பங்கேற்க வேண்டும்,” என்றார்.
விவாதங்களில் வெளிப்படைத்தன்மையையும் பங்குதாரர்—களின் பங்களிப்பையும் உறுதிப்படுத்த உடனிருந்த அமர்வு அவசியம் என்றார்.
மேலும், நில உரிமையாளரின் திட்டத்திற்கு உள்ளூர் சமூகம் தீவிரமாக கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று இங் ஸீ ஹான் ஊக்குவித்தார்.
“FGD அமர்வின் போது குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு, கவலை, பரிந்துரைகளை நில உரிமையாளர் அல்லது ஆலோசகர்க-ளிடம் தெரிவிக்கும்படி தான் ஊக்குவிப்பதாக கூறினார். இவை அனைத்தும் SIA அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும்,” என்றார்.
அதேநேரம், குடியிருப்பாளர்களின் அமைதியான போராட்ட முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
“இந்த வாரம் தாமான் வாவசானில் நடைபெறவுள்ள போராட்ட அமர்வை நான் கவனத்தில் கொண்டுள்ளேன்; அது சுமூகமாகவும் ஒழுங்காகவும் நடைபெற வாழ்த்துகிறேன்,” என்று இங் ஸீ ஹான் தெரிவித்தார்.





