கோலாலம்பூர், நவ 23 — கிளானா ஜெயாவில் உள்ள SS8 பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் முதன்மை சுவிட்ச்போர்டு அறையில் கடந்த புதன்கிழமை (நவம்பர் 19) ஏற்பட்ட தீ விபத்தில் தடைப்பட்ட மின்சார விநியோகம் நேற்று நள்ளிரவு க்குப் பிறகு மீண்டும் இணைக்கப்பட்டது.
தேசிய மின்சப்ளை நிறுவனம் (TNB) வெளியிட்ட அறிக்கையில், இணை மேலாண்மைக் குழு ஜெனரேட்டர் இணைப்புக்கு தேவையான பாகங்களை சரி செய்து முடித்த பின்னர், நள்ளிரவு 12.10 மணிக்கு மொபைல் ஜெனரேட்டர் செட் (ஜென்செட்) மூலம் தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தது.
“குடியிருப்புவாசிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக இந்த தற்காலிக மின்சாரம் வழங்கப்படுகிறது. அதே சமயம், கட்டட ஒப்பந்ததாரர் இணை மேலாண்மைக் குழுவுக்கு சொந்தமான முதன்மை சுவிட்ச்போர்டு முழுமையாக சரி செய்யும் பணிகளை மேற்கொள்கிறார்,” என்று TNB இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாக வும், தேவைப்படின் கட்டிட ஒப்பந்ததாரருக்கு தொழில்நுட்ப உதவி வழங்க TNB தயாராக உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், முதன்மை சுவிட்ச்போர்டு அறை தீ விபத்துக்குப் பிறகு அடுக்குமாடிக் குடியிருப்பு முழுவதும் இருளில் மூழ்கியது காட்டப்பட்டது. இதனால் சுமார் 1,000 குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டனர்.




