சுபாங் ஜெயா, நவம்பர் 22: கடந்த ரமலானில் அக்ரோ பேங் வழங்கிய 15 சிலாங்கூர் ரமலான் சந்தைகளிலும் 1,500 கடைகளிலும் விற்பனைப் புள்ளி (POS) சாதனங்களைப் பயன்படுத்தி மொத்தம் ஏழு மில்லியன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த எண்ணிக்கையில் மட்டும் ஷா ஆலாம் விளையாட்டு அரங்குப் சந்தையில் 1.7 மில்லியன் பரிவர்த்தனைகள் இடம்பெற்றதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இது மாநிலத்தின் மின்மய செயல்முறை வலுவாக முன்னேறி வருவதை வெளிப்படுத்துகிறது.
மொத்தமாக, POS முறையைப் பயன்படுத்தி சிலாங்கூர் முழுவதும் உள்ள 15 ரமலான் சந்தைகளின் விற்பனை மதிப்பு RM 200 மில்லியனை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
“அந்த ஏழு மில்லியன் பரிவர்த்தனைகளில் பிளாட்ஸ் தளத்தின் மின் கூப்பன்களும் அடங்கும். மேலும், பிற வங்கிகளின் குறியீடு ஸ்கேன் முறையையும் பலர் பயன்படுத்தினர். அவை பிளாட்ஸ் முறையில் பதிவாகாத போதிலும், POS சாதனங்கள் மூலம் செயல் படுத்தப்பட்டதால் மொத்த எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“மாநிலம் தற்போது நுண்ணறிவு மாநிலமாக முன்னேறும் நோக்கில் மின்கட்டமைப்பு, நுண்ணறிவு நிர்வாகம் மற்றும் மின் வணிக பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறது. POS சாதனங்களின் மிகுந்த பயன்பாடு நமது பாதை சரியானது என்பதை வெளிப்படுத்தும் முக்கிய குறியீடு,” என்று அவர் கூறினார்.




