கோலாலம்பூர், நவ 21- மலேசியக் காற்பந்து சங்கம் (FAM) ஏழு மரபுவழி வீரர்களைப் பதிவு செய்ததில் நடந்த ஊழல் சம்பவத்தை மூடி மறைக்கும் எந்த முயற்சியும் இல்லை என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இது உரிய நடைமுறைகளின்படி கையாளப்பட வேண்டிய ஒரு பெரிய பிரச்சினை என்றும் அவர் விவரித்தார்.
அமைச்சரவை இந்த விவகாரத்தைப் பற்றி விவாதித்ததாகவும், அதை மூடி மறைக்க எந்த முயற்சியும் இருக்கக்கூடாது என்று முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“தொடர்ந்து விசாரித்து நடவடிக்கை எடுங்கள். அதுதான் உத்தரவு. ஆயினும்கூட, செயல்முறை (procedure) தொடர வேண்டும். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தை (FIFA) மட்டும் அடிப்படையாக வைத்து நாங்கள் முடிவெடுப்பதில்லை,” என்று எத்தியோப்பியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் மலேசிய ஊடகங்களிடம் வியாழக்கிழமை அவர் கூறினார்.
FIFA-வின் நம்பகத்தன்மையை அரசாங்கம் கேள்வி கேட்கவில்லை என்றும், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ எடுத்த நிலைப்பாட்டிற்குத் தாம் உடன்படுவதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.




