ஷா ஆலாம், நவ 21- வேப் அல்லது மின்னியல் சிகரெட் தயாரிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான கொள்கை வரைவுத் திட்டத்தைச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் தயாரித்து வருவதாகவும், இதில் வேப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கும் பிரச்சாரங்களை நடைமுறைப்படுத்துவதும் அடங்கும் என்றும் பொதுச் சுகாதாரத்திற்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
இந்தக் கொள்கையானது, 2023 பொதுச் சுகாதாரத்திற்கான புகைபிடிக்கும் பொருள் கட்டுப்பாடு சட்டத்தின் (சட்டம் 852) கீழ் உள்ள அணுகுமுறைக்கு ஏற்ப முழுமையாக உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
இக்கொள்கையை வகுக்கும்போது, தற்போதைய சந்தை நிலைமைகள், பொதுச் சுகாதாரத்தின் மீதான தாக்கம் மற்றும் மாநில, மத்திய முகவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் அமலாக்கத்தை வலுப்படுத்துதல் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
மேலும், மின்னியல் சிகரெட் பயன்பாட்டைத் தடை செய்வதற்கான பிரச்சாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கச் சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் திணைக்களம் உட்படப் பங்குதாரர்களுடன் மாநில அரசாங்கம் விரைவில் கலந்துரையாடல் அமர்வுகளை நடத்தவுள்ளது.
இதுவரை, மாநிலம் முழுவதும் உள்ள வளாகங்களில் மின்னியல் சிக தொடர்பான விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பரங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. இளைஞர்களை மையமாகக் கொண்டு விழிப்புணர்வுத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் வேப் பயன்பாட்டின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சட்டமன்றத்தில் கூறினார்.




