கோலாலம்பூர், நவ 21- உலக கலப்பு இரட்டையர் சாம்பியன்களான மலேசியாவின் சென் டாங் ஜீ - தோ ஈ வீ ஜோடி, ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், இந்த ஆண்டு 10ஆவது முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள இந்த இணை, சிட்னியில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் தைவானின் யே ஹோங் வெய் - நிக்கோல் கோன்சால்ஸ் சான் ஜோடியை 36 நிமிடங்களில் 21-17, 21-15 என்ற நேர் செட்களில் வீழ்த்தியது.
தைவானிய ஜோடியுடனான ஐந்து மோதல்களில் இது இவர்களுக்குக் கிடைத்த நான்காவது வெற்றியாகும். அடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ள அதிகப் பணப்பரிசு கொண்ட உலக டூர் இறுதிப் போட்டிக்கு (WTF) தகுதி பெற்றுள்ள டாங் ஜீ - ஈ வீ ஜோடி, நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் தைவானின் யாங் போ ஹ்சுவான் - ஹூ லிங் ஃபாங் அல்லது தாய்லாந்தின் பக்கபோன் டீரரட்சகுல் - சப்சிரீ தேரரத்தனாச்சாய் ஆகியோரை எதிர்கொள்ளும்.
இந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்த மலேசிய ஜோடி, இதுவரையில் இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது.




