ஷா ஆலாம், நவ 21- சலோமா பைப் பாஸுக்கு அருகே கிள்ளான் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதாக கூறப்பட்ட ஓர் ஆடவரின் சடலம், இன்று காலை கம்போங் சுங்கை கண்டிஸ் பகுதியில் மீட்கப் பட்டது.
டங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர், உதவி ஆணையர் சசாலி ஆடம், இன்று காலை 10.30 மணியளவில் சடலம் கண்டெடுக்கப் பட்டதாகவும், அடையாளம் காணும் செயல்முறைகள் மற்றும் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்த முழுமையான விவரங்களை அறிவிக்கப் போலீஸ் ஒரு சிறப்பு ஊடகச் சந்திப்பு நடத்தும் என்றும் அவர் கூறினார். "பாதிக்கப்பட்டவரின் சடலம் உடற்கூறு ஆய்விற்காக ஷா ஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணியளவில், சலோமா பைபாஸுக்கு அருகில் கிள்ளான் ஆற்றுச் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி ஒருவர் காணாமல் போனார்.
சம்பவம் நடந்த போது அப்பகுதியில் 13 தொழிலாளர்கள் இருந்தனர், ஆனால் 12 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். காணாமல் போன தொழிலாளி உட்பட ஏழு இந்தோனேசியர்கள், நான்கு பங்களாதேஷ் நாட்டினர் மற்றும் ஒரு உள்ளூர்வாசி ஆகியோர் அப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பாதிக்கப் பட்டவருக்குச் சொந்தமான மிட்சுபிஷி பஜேரோ ரக நான்கு சக்கர வாகனம், சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.
கிள்ளான் ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் சடலம் மீட்பு
21 நவம்பர் 2025, 7:46 AM




