கோலாலம்பூர், நவ 20- அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட சரிவுச் சம்பவங்கள் உட்பட எந்த ஒரு சாத்தியமான ஆபத்துகளையும் எதிர்கொள்ளப் பொதுப்பணித் துறை (JKR) எப்போதும் தயாராக இருப்பதாக அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ அலெக்சாண்டர் நாந்தா லிங்கி தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, மத்திய சாலைகளும் சரிவுகளும் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, JKR பேரிடருக்கு முன், பேரிடரின் போது, மற்றும் பேரிடருக்குப் பின் என மூன்று கட்ட உத்திகளைச் செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
"சரிவுகளின் மேற்பரப்பு அசைவுகளைக் கண்காணிக்க, எச்சரிக்கை வரம்பு JKR-இன் சரிவு முன்னறிவிப்பு அமைப்பு இணையதளம் மூலம் காட்சிப்படுத்தப்படும். அத்துடன், மாவட்ட JKR, மாநில JKR மற்றும் தொடர்புடைய பங்குதாரர்களுக்கும் ஆரம்பகட்ட அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன.
இந்தத் தகவல்கள் முன்னறிவிப்பு அமைப்பில் இருந்து பெறப்பட்ட மழையின் தரவுகள் மற்றும் ஆபத்தான இடங்களில் பொருத்தப்பட்ட சரிவு அசைவுத் தரவுகளின் அடிப்படையில் பெறப்படுகின்றன," என்று இன்று நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
மத்திய சாலைகள் மற்றும் சரிவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதை உறுதி செய்வதற்காக பருவமழைக் காலத்தை எதிர்கொள்ள அமைச்சு மேற்கொண்ட தயாரிப்புகள் குறித்து முகமது அசிசி அபு நைம் (சுயேச்சை-குவா மூசாங்) எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது இதனைக் கூறினார்




