ஹனோய், நவ 20 - வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியில் வரலாறு காணாத வெள்ளப்பேரிடர் ஏற்பட்டதால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 16ஆக உயர்வு கண்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதியிலிருந்து இடைவிடாத மழை தென்-மத்திய வியட்நாமைத் தாக்கி வருகிறது. இதன் விளைவாக, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பிரபலமான கடற்கரை விடுமுறைத் தலங்கள் பல கட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தகவல்படி, கடந்த வார இறுதி முதல் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஐந்து பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 43,000க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், நிலச்சரிவுகள் காரணமாகப் பல முக்கியச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
கியா லாய் (Gia Lai) மற்றும் டாக் லாக் (Dak Lak) மாகாணங்களில் மீட்புக் குழுவினர் படகுகளைப் பயன்படுத்தி, உயர்ந்த வெள்ளத்தால் சிக்கித் தவித்த மக்களை மீட்க, வீடுகளின் ஜன்னல்களைத் திறந்து, கூரைகளை உடைத்து உதவி செய்தனர் என்று மாநில ஊடகங்கள் தெரிவித்தன.
பருவநிலை மாற்றம் காரணமாகவே தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதாகவும், மேலும் அதிக அழிவை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞான சான்றுகள் அடையாளம் கண்டுள்ள நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் பொதுவாக ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் கடும் மழையை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.




