பெட்டாலிங் ஜெயா, நவ 20- மலேசியாவின் தேசிய ஆடவர் இரட்டையர் ஆட்டக்காரர்களான கோ ஸே ஃபீ மற்றும் நூர் இஸுடின் ரும்சானி ஆகியோர் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்றில், தைவான் ஜோடியை எதிர்த்துப் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினர்.
உலக தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தக் கூட்டணி, உலகச் சுற்றுப்பயண இறுதியாட்டத்திற்கு (World Tour Finals) தகுதிபெறும் வாய்ப்பை மயிரிழையில் இழந்த நிலையில், சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற இறுதி 16 சுற்று ஆட்டத்தில், உலக தரவரிசையில் 12ஆம் இடத்தில் உள்ள லீ ஜே ஹூய்-யாங் போ ஹ்சுவான் (Lee Jhe Hui-Yang Po Hsuan) ஜோடியை 21-23, 21-17, 21-10 என்ற செட் கணக்கில் சுமார் ஒரு மணி நேரம் போராடி வென்றது.
அவர்கள் நாளைய காலிறுதி ஆட்டத்தில், மலேசியாவின் மற்றுமொரு ஜோடியான வான் ஆரிஃப் வான் ஜூனைடி-யாப் ரோய் கிங் (Wan Arif Wan Junaidi-Yap Roy King) அல்லது தென் கொரியா-மலேசியக் கூட்டணியான சோய் சால் கியூ-கோ வி ஷெம் (Choi Sol Gyu-Goh V Shem) ஜோடியை எதிர்கொள்வார்கள்.




