புத்ராஜெயா, நவ 20- தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சநிலை மாநாட்டில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொள்ளவிருக்கிறார்.
இந்த ஜி20 மாநாட்டில் ஆசியான் பிராந்தியத்தின் அனுபவங்களையும் கண்ணோட்டங்களையும் பிரதமர் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
மலேசியா 2025ஆம் ஆண்டுக்கான ஆசியானின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நிலையில், அதன் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த மேடையைப் பயன்படுத்தி உலகளாவிய பொருளாதாரம் மற்றும் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் விவகாரங்கள் குறித்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவுள்ளார்; குறிப்பாக, உலகத் தெற்கில் (Global South) உள்ள நாடுகளின் நலன் சார்ந்த விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன், அன்வார் அவர்கள், கடந்த மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்க அதிபர் ராமபோசாவுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்
மேலும், பிரதமர் அவர்கள் போட்ஸ்வானா நாட்டின் துணை அதிபர் நதாபா என்கோசினாத்தி கோலதேயை (Ndaba Nkosinathi Gaolathe) மரியாதை நிமித்தமாகச் சந்தித்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொதுவான நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
இவை தவிர, ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் சந்திப்புகளை நடத்தவுள்ளதுடன், தென்னாப்பிரிக்க முஸ்லிம் சமூகம் மற்றும் உள்ளூர் முக்கிய தொழில் துறைப் பிரதிநிதிகளை ஒரு வணிக மன்றத்தில் சந்திப்பார்; மேலும் மலேசியப் புலம்பெயர்ந்தோரையும் சந்திப்பார் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




