ஷா ஆலாம், 20 நவம்பர்: 14 அக்டோபர் மாணவி ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில அரசு வலுப்படுத்தியுள்ளது.
நேற்று பெட்டாலிங் உத்தமா மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற பள்ளி பாதுகாப்பு வலுவூட்டல் அமர்வில் கலந்து கொண்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டு, இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் உறுதி செய்யப் படுவதை கண்காணித்தாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மேலும் மாணவர்களின் உடல், உணர்ச்சி மற்றும் மனநலம் குறித்து நான் மிகுந்த கவலைப்படுவதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார். இந்த விவாதத்தில் கல்வி அமைச்சு, சிலாங்கூர் மாநிலக் கல்வித் துறை, அரச மலேசிய காவல் துறை, பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் (PIBG) மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்று, பாதுகாப்பு அமைப்பு முழுமையாக வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்தனர்.
அதே நேரத்தில், பள்ளி பாதுகாப்பு மேம்பாட்டிற்காக பண்டார் உத்தமா டாமன்சாரா 4 தேசிய இடைநிலைப்பள்ளிக்கு அரசு RM 17,000 ஒதுக்கியுள்ளது. கடந்த மாதம் பள்ளிகளில் மாணவர் பதிவு செயல்முறை, உலோக தடயவியல் சாதனம் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மற்றும் பெற்றோர்–ஆசிரியர் இணைந்த அறிவிப்பு முறைமை ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவு படுத்த உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
மேலும் இத்தகைய சம்பவங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. பள்ளிகள் எப்போதும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.





