சிடோன் நவ 19 - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு லெபனானில் உள்ள சிடோன் நகருக்கு அருகில் அமைந்துள்ள அய்ன் அல்-ஹில்வெஹ் (Ain al-Hilweh) அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்குப் பிறகு எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளில், லெபனான் செஞ்சிலுவைச் சங்கம், சிவில் பாதுகாப்புப் படையினர், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து செல்வதைக் காண முடிந்தது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சிடோன் மேயர் மொஸ்டஃபா ஹிஜாஸி (Mostafa Hijazi) அப்பகுதியில் நிலைமை "சிறிது பதட்டமாக" இருப்பதாக வர்ணித்துள்ளார். ஊடக அறிக்கையின்படி, இந்த முகாமில் சுமார் 80,000 அகதிகள் தங்கியுள்ளனர்.
ஹிஸ்புல்லா அமைப்புடன் நவம்பர் 27, 2024 அன்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, இஸ்ரேல் லெபனான் பிராந்தியத்தின் மீது பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேலும், இந்த மோதல் தொடங்கியதில் இருந்து தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள ஐந்து குன்றுகளின் மீதான தனது கட்டுப்பாட்டையும் சியோனிச நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன




