கோலாலம்பூர், நவ 19- மலேசிய இந்திய சமுதாய மாற்றத்திற்கான பிரிவு (மித்ரா) மலேசிய இந்திய இளைஞர்களிடையே வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் மேம்படுத்தும் நோக்கில், சரக்கு வாகன ஓட்டுநர் உரிமம் (GDL - Goods Driving License) பெறுவதற்கான லாரி உரிம உதவித் திட்டம் (GDL Lori MITRA) குறித்த அறிவிப்பைப் போஸ்டர் மூலம் வெளியிட்டுள்ளது.
லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்துத் துறையில் இந்தியச் சமூகத்தினருக்கு நிலையான வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்த அரிய வாய்ப்பில் சேருவதற்கான விண்ணப்ப காலக்கெடு நவம்பர் 30, 2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், பயிற்சியும் உரிமக் கட்டணமும் முழுமையாக மித்ராவால் ஏற்றுக் கொள்ளப்படும். வெற்றிகரமாகத் தேர்ச்சி பெறுபவர்களுக்குப் பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் நிறுவனங்கள் மூலம் வழிகாட்டப்படும்.

லாஜிஸ்டிக்ஸ் துறையில் பொன்னான வாய்ப்பைப் பெற விரும்பும் தகுதியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்கள், வரையறுக்கப்பட்ட இடங்கள் நிரம்புவதற்கு முன், வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து உடனடியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
B40 மற்றும் M40 வருமானப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பது அவசியம். அடிப்படைத் தகுதியாக, விண்ணப்பதாரர்கள் 21 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பதுடன், ஒரு வருடத்திற்கும் மேலாக 'D' வகுப்பு (CDL) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மேலும், JPJ அல்லது PDRM-இன் கறுப்புப் பட்டியலில் இடம்பெறாதவராக இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் 650 தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நாடு முழுவதும் உள்ள 11 அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது தகுதியுள்ள இந்திய இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




