புத்ராஜெயா, நவ 19 — ஆடம்பர வாகன விற்பனை நிறுவனம் ஒன்று, சுமார் RM70 மில்லியன் மதிப்பிலான விற்பனைப் பரிவர்த்தனைகளில் இருந்து கிடைத்த உண்மையான வருமானத்தை அறிவிக்கத் தவறியது உட்பட, பல வரி மீறல்களில் ஈடுப்பட்டுள்ளதாக மலேசிய வருமான வாரியம் கண்டறிந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் வணிக அலுவலகம், இயக்குநரின் வீடு மற்றும் தொடர்புடைய கணக்காய்வு நிறுவனம் ஆகிய இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இந்த வரி தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த சோதனை நடவடிக்கை பெரும் மதிப்புள்ள வர்த்தகங்களில் வரி ஒழுங்கை உறுதிப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
அந்த வகையில் வரியை மறைப்பது தேசிய வருவாயைப் பாதிக்கும் என்பதால் வாகன அந்நிறுவனத்தின் செயலை ஏற்றுக்கொள்ள இயலாது என்று மலேசிய வருமான வாரியத்தின் தலைமை அதிகாரி டத்தோ டாக்டர் அபு தாரிக் ஜமாலுடீன் தெரிவித்துள்ளார்.
“மிகப்பெரிய தொகைகளைச் சார்ந்த வரி மீறல்கள், நாட்டின் வருவாயை மட்டும் பாதிக்கவில்லை, அதன் நியாயத்தன்மையையும் குறைக்கின்றன. எனவே அவற்றை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது,” என்று அவரை தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.




