கோலாலம்பூர், நவ 19 - பண்டார் சுங்கை லோங்கில் உள்ள ஒரு பிரபலத்தின் வீட்டில் நடத்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, காஜாங் பகுதியில் நேற்று ஒரு ஜோடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் சுமார் RM360,000 மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது.
21 மற்றும் 37 வயதுடைய அந்த ஜோடி, காஜாங் மாவட்டக் காவல்துறை தலைமையகக் குற்றப்பிரிவும், சிலாங்கூர் கண்டின்ஜன் காவல்துறையும் இணைந்து காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடத்திய சோதனை நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டனர் என காஜாங் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏ.சி.பி நாஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்டவர்கள், தனியார் துறையில் பணிபுரியும் ஓர் ஆணும், வேலை இல்லாத உள்ளூர் பெண்ணும் ஆவர். இருவரும் இந்தக் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
“விசாரணைக்கு உதவ இரண்டு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
இரு சந்தேகநபர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். மேலும், அவர்கள் மீது போதைப்பொருள் தொடர்பான தலா இரண்டு குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என நஸ்ரோன் கூறினார்.
ஆண் சந்தேகநபர் இரண்டு நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெண் சந்தேகநபர் ஒரு நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, தண்டனைச் சட்டப் பிரிவு 457 மற்றும் பிரிவு 379A ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
“இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பிற சந்தேக நபர்களையும், திருடப்பட்ட பொருட்களையும் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது,” என்று நஸ்ரோன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் உள்ளவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஷாருல்ஹஸ்ரம் ரம்லி அவர்களை 017-2530380 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்தக் கொள்ளையில், நகைகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், மேலும் அராய் மற்றும் ஷோயி என்ற பிராண்டுகளின் ஹெல்மெட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளது. அவை மொத்தம் சுமார் RM360,000 மதிப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




