கோலாலம்பூர், நவ 19 — டிஜிட்டல் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, 2026-2030 தேசிய குழந்தை கொள்கை மற்றும் செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட 16 மூலோபாய முன்னுரிமைகளின் கீழ் 141 நடவடிக்கைகளை அமல்படுத்துவதின் அவசியத்தை மலேசியா வலியுறுத்தியுள்ளது.
புதிய திட்டம் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பான சூழலில் மீட்டெடுத்து மேம்படுத்துவதற்கான தெளிவான திசையை வழங்குகிறது என பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறினார்.
“தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பல வாய்ப்புகளை வழங்கினாலும், சைபர் கொடுமை, சுரண்டல், இணைய மோசடி மற்றும் உணர்ச்சி சார்ந்த அச்சுறுத்தல்கள் போன்ற ஆபத்துகளையும் அதிகரிக்கின்றன.
“டிஜிட்டல் சவால்கள் தேசிய எல்லைகளை மீறி செல்கின்றன. எனவே, நாம் ஒத்துழைத்து, சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து, பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவது மிகவும் முக்கியம்,” என்று இணையக் குழந்தை பாதுகாப்பு தொடர்பான ஆசியான் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்ப (ICT) விவாத அரங்கம் 2025 மற்றும் தேசிய குழந்தை கொள்கை மற்றும் செயல் திட்டம் 2026-2030 ஆகியவற்றைத் தொடங்கிய பிறகு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
குழந்தை பாதுகாப்பு என்பது குடும்பம், ஆசிரியர்கள், சமூகங்கள், அரசு சாரா அமைப்புகள் (NGO), மற்றும் தனியார் துறையின் ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படுவதாக நான்சி வலியுறுத்தினார்.
பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களில் பலர் இன்னும் குழந்தைகளின் பாதுகாப்பையும் நலனையும் பாதிக்கக்கூடிய இணைய ஆபத்துகளைப் பற்றி தெரிவதில்லை என்றும் அவர் கூறினார்.
“15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர். ஏனெனில், அவர்களில் பலர் கல்வி, பயிற்சி அல்லது வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் உள்ளனர்.
“அவர்களை பாதுகாப்பதற்காக மட்டுமன்றி, டிஜிட்டல் முன்னேற்றங்களை புரிந்துகொண்டு, பாதுகாப்பான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக இருப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தபப்டுகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட தரப்பினரின் புரிதலை மேம்படுத்தவும், புதிய கொள்கைகள் பயனுள்ளதுமானதாக இருப்பதையும் உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டுள்ளது எனவும் நான்சி கூறினார்.




