ஷா ஆலம், நவ 18 - 2026 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் உள்ள இந்தியர்களுக்கான திட்டங்களையும் டத்தோ மந்திரி புசார் அவர்கள் அறிவித்தார்.
அவ்வகையில், கல்வித்துறையில் இந்தியர்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து மாநில மனிதவளம், மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு வீரமான் தனது நன்றியைப் புலப்படுத்தினார்.
இந்திய மாணவர் கல்வி மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி. குறிப்பாக பி40 (B40) பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களின் பெற்றோர் சுமக்கும் சுமையைக் குறைக்கவும், அவர்களின் நலனை உறுதி செய்யவும், அடுத்த ஆண்டு இந்தியச் சமூகத்தின் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு RM2.7 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இது 2025 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது RM515,000 அதிகம் ஆகும்."இந்த நிதிப் பங்கீட்டில், தமிழ்த் தேசிய வகைப் பள்ளிகளில் (SJKT) பயிலும் பி40 மாணவர்களுக்கான பள்ளிப் பேருந்து கட்டண உதவி மானியத் திட்டத்திற்காக RM1.2 மில்லியன் மற்றும் பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கான அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA & IPTS) படிப்புக்கான கல்விக் கட்டண உதவித் திட்டத்திற்காக RM1.5 மில்லியன் ஆகியவை அடங்கும்," என்று அவர் தெரிவித்தார்.




