பேங்காக், நவம்பர் 18 — மலேசியா, தாய்லாந்தின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் முன்னணி இடமாக மாறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நான்கு மில்லியனுக்கு மேற்பட்ட மலேசியர்கள் இந்த நாட்டுக்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 16 வரை 28.28 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தாய்லாந்து சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர் நத்ரியா தவீவோங் தெரிவித்தார்.
அதிகமான பயணிகள் வந்த முன்னணி ஐந்து நாடுகள் மலேசியா 4.06 மில்லியன், சீனா 3.95 மில்லியன், இந்தியா 2.11 மில்லியன், ரஷ்யா 1.53 மில்லியன், தென் கொரியா 1.34 மில்லியன் பயணிகள் ஆவர்.
இந்த ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்கள் மூலம் சுமார் RM168.12 பில்லியன் வர்த்தக வருமானம் உருவாகியுள்ளது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார். மேலும் கடந்த வாரத்தில் மலேசியா தலைமையில் குறுகிய தூர சந்தைகள் தொடர்ந்து வலுவாகச் செயல்பட்டதாக அவர் கூறினார்.
வரவிருக்கும் வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் ண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார். இது ஜப்பானில் தொடர்ச்சியான பொது விடுமுறை நாட்கள் மற்றும் குறுகிய மற்றும் நீண்ட தூர சந்தைகளுக்கான பருவப் பயண காலம் தொடங்குவதால் ஏற்படும் என்று அவர் விளக்கினார்.


