டாக்கா, நவ 18 - வங்காளதேசத்தில், தமது 15 ஆண்டுகால ஆட்சியைக் கவிழ்க்க வழிவகுத்த மாணவர் எழுச்சியை ஒடுக்குவதற்கு மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட அந்நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்தாண்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ஹசீனாவும் உள்துறை அமைச்சரான அசாடுஸ்சாமான் கானும் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வருகை புரியாத நிலையில், அவர்களுக்கு இத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்நாட்டின் வரலாற்றில் ஒரு பிரதமருக்கு எதிரான மிகக் கடுமையான வழக்காக இது கருதப்படுகிறது.
போராட்டக்காரர்களுக்கு எதிராக கொடிய பலத்தைப் பயன்படுத்தியதற்காக ஹசீனாவிற்கும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாடுஸ்சாமான் கானுக்கும் வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள அனைத்துலக குற்றவியல் நடுவர் மன்றம் மரண தண்டனை விதித்தது.
இவ்வழக்கில், மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் காவல்துறை தலைவர், ஹசீனாவுக்கு எதிராக அரசு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்கள் தலைமையிலான கிளர்ச்சியின் போது நூற்றுக்கணக்கானோரைத் கொன்றதற்காக ஹசீனா மற்றும் கான் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சுமத்தப்பட்டன.
இச்சம்பவத்தில், 800க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 14,000 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் கீழ் உள்ள சுகாதார ஆலோசகர் கூறியுள்ளார்.
அதேவேளையில், 1,400 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்று ஹசீனா கூறியுள்ளார். தீர்ப்பு வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஹசீனா சரணடையாவிட்டால் அல்லது கைது செய்யப்படாவிட்டால், அவர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டது.
-- பெர்னாமா




